தோட்டத்தில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்
களக்காடு அருகே தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசமானது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள எஸ்.எஸ்.பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ளது. இங்கு அவர் வாழைகள் பயிர் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது தோட்டத்தில் புகுந்தது. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 200 வாழைகளை நாசம் செய்தது. அவை 5 மாதமான ரசகதலி வகையை சேர்ந்த வாழைகள் ஆகும். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் தினசரி பயிர்கள் சேதமடைகின்றன. பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு காட்டு பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் சேதமடையும் பயிர்கள் மற்றும் மதிப்பு எவ்வுளவு? என்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினால் தான் பாதிப்பின் தன்மை வெளிவரும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். பகல் முழுவதும் வெயிலில் விவசாய பணியை செய்துவிட்டு இரவும் தூங்க முடியாமல் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.