வெளிநாட்டில் அவதிப்படும் கணவரை மீட்கக்கோரி மனைவி மனு

வெளிநாட்டில் அவதிப்படும் கணவரை மீட்கக்கோரி மனைவி மனு அளித்தார்.

Update: 2022-11-08 19:16 GMT

வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பிரியா. இவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனது கணவர் செல்வம் வேலைக்காக சவுதி அரேபியா நாட்டிற்கு கடந்த 2012-ம் ஆண்டு சென்றார். பின்னர் 2018-ம் ஆண்டு 40 நாட்கள் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டார். 11 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வருகிறார்.

அவர் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை முயற்சி செய்தும், அந்த நிறுவன உரிமையாளர் அவரை சொந்த ஊருக்கு அனுப்ப மறுக்கிறார். ேமலும் அவர் இருக்கும் இடத்தில் இருந்து 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு இடத்திற்கு சென்று வேலை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக எனது கணவர் செல்போன் மூலம் என்னிடம் தெரிவித்தார். மேலும் சம்பளமும் சரியாக கொடுப்பதில்லை என்றும், மிகவும் கஷ்டப்படுவதாகவும், எனவே அவர் சொந்த ஊருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார். எனவே அங்கு மிகுந்த சிரமம் அடைந்து, அவதிப்படும் எனது கணவரை மீட்டு இந்தியாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்