கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி
மதுபோதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செஞ்சி
மதுபோதையில் தகராறு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது 30). இவரது மனைவி குப்பம்மாள்(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நடராஜன் செஞ்சி பஸ் நிலையம் மற்றும் கூட்டுரோடு பகுதியில் நிற்கும் பஸ்களில் தின்பண்டம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வருகிறார். அவர் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்துவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடராஜன் மீது அவரது மனைவி பல முறை புகார் செய்துள்ளதாகவும், மேலும் மனமுடைந்த நிலையில் அவர் 2 முறை பிளேடால் உடலை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அலறி துடித்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த நடராஜன் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குப்பம்மாள் சமையல் அறையில் கொதித்து இருந்த ரசத்தை எடுத்து கணவர் முகத்தில் ஊற்றினார். இதனால் வலி தாங்க முடியாமல் நடராஜன் கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது முகம் வெந்த நிலையில் வலியால் நடராஜன் அலறி துடித்துக்கொண்டிருந்ததை பார்த்தனர். ஆனால் மதுபோதையில் இருந்தததால் அவரது அருகில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் வலி சற்று குறைந்ததும் எழுந்த நடராஜன், அவரது மனைவி மீது புகார் கொடுப்பதற்காக செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு மதுபோதையில் தள்ளாடியபடியே நடந்து சென்றார்.
சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு
அங்கு அவரை பார்த்த போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் செல்ல மறுத்த நடராஜனை போலீசார் வலுக்கட்டாயமாக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் மதுபோதையில் இருந்ததால் சிகிச்சை கொடுக்க டாக்டர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த அவர் சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்தார்.
இதன் பின்னர் நடராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
குடிபோதையில் தகராறு செய்த கணவர் முகத்தில் அவரது மனைவி கொதிக்கும் ரசத்தை ஊற்றிய சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.