தூக்கமாத்திரை சாப்பிட்டு மனைவி தற்கொலைவிரக்தியில் கணவன் ரெயில்முன் பாய்ந்து உயிரை மாய்த்தார்

காட்பாடி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தியடைந்த கணவர் ரெயில்முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

Update: 2023-06-11 17:27 GMT

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட மேஸ்திரி

காட்பாடியை அடுத்த கோரந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 23). மேஸ்திரியாக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா. இவர்களுக்கு 15 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மனைவி தற்கொலை

இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டார். உடனே அவரை பிரம்மபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை பார்த்து விரக்தி அடைந்த கணவர் ராஜசேகர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பிரம்மபுரம் சென்றார். அங்கு ரெயில்வே லைன் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரெயில்முன் பாய்ந்தார்

இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி போலீசார் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் இவர்களின் 15 மாதமே ஆன ஆண் குழந்தை அனாதையாக தவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்