மனைவி, 4 குழந்தைகள் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-13 16:56 GMT

கலசபாக்கம்

திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெஞ்சை உலுக்கும் இந்த பயங்கர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 40), கூலித் தொழிலாளி. இவருைடய மனைவி வள்ளி (37), ஒரவந்தவாடி ஊராட்சி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர்களுடைய மகள்கள் சவுந்தர்யா (20), திரிஷா (15), மோனிஷா (14), பூமிகா (9), தனுசு (4), மகன் சிவசக்தி (6).

இதில் மூத்த மகள் சவுந்தர்யாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி அருகே உள்ள மத்தூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திரிஷா 10-ம் வகுப்பும், மோனிஷா 9-ம் வகுப்பும், பூமிகா 4-ம் வகுப்பும், சிவசக்தி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பழனி, மோட்டூர் பகுதியில் காஞ்சி கொரட்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதுளமேரி என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 4 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்து வந்தார். அத்துடன் பழனி தனது குடும்பத்துடன் நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அடிக்கடி தகராறு

கடந்த சில மாதங்களாக பழனி குடிபோதைக்கும், கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கும் அடிமையாகி சரிவர சாப்பிடாமலும், தூங்காமலும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது சம்பந்தமாக கணவன்-மனைவி இருவரையும் குடும்பத்தினர் சமரசம் செய்து வைத்துள்ளனர். மேலும் வள்ளியின் தாய் ஜானகி அம்மாள் நேற்று இரவு வீட்டுக்கு சென்று இருவரிடம் பேசிய போது அவர்கள் இருவரும் சகஜமான நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஜானகி தனது மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றார் அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது. இதனால் அவர் குரல் கொடுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில்...

அப்போது வீட்டின் உள்ளே இருந்து அழுகை குரல் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த ஜானகி உடனடியாக கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது விளக்கு இல்லாமல் வீடு இருட்டாக இருந்தது. இதனால் மின் விளக்கை போட்டுள்ளார்.

அப்போது அங்கு தனது மகள் வள்ளி மற்றும் குழந்தைகள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடிவந்து கூச்சல் போட்டு அழுதுள்ளார்.

அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது வள்ளி, திரிஷா, மோனிஷா, சிவசக்தி, தனுசு ஆகியோரின் தலை மற்றும் கழுத்தில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர்.

மேலும் பூமிகா தலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தூக்கில் பிணம்

மேலும் பழனி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

படுகாயம் அடைந்த பூமிகா மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே புதிதாக ஒருவரிடம் பழனிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்து பழனி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்து வந்தார்.

இதனால் அவரை செங்கம் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று மந்திரித்து தாயத்து கட்டி அழைத்து வந்துள்ளனர் என்றனர்.

மேலும் இறந்து கிடந்த வீட்டின் உள்ளே கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ஒன்று கைப்பிடி இல்லாமல் தனியாக உள்ளது. அதில் ரத்தக்கறை ஏதும் இல்லை என்றனர்.

போலீசார் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா போதையில் பழனி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஆனாலும், அவர் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது வந்து கொலை செய்துவிட்டு பழனியை தூக்கில் தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்