மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-19 19:55 GMT

மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலாக மழை

காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அடிப்பதும், விட்டு, விட்டு மழை பெய்வதுமாக உள்ளது. இந்தநிலையில் காரியாபட்டி, நெடுங்குளம், பாப்பனம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், தோணுகால், கல்குறிச்சி, சத்திரம் புளியங்குளம், மந்திரி ஓடை, கல்லுப்பட்டி, நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அதேபோல நேற்று மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தது. தொடர்மழையினால் இந்த பகுதியில் உள்ள மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பருத்தி, கடலை போன்ற பயிர்களுக்கு தொடர்மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிர்களுக்கு களை எடுக்க இந்த மழை ெபரிதும் உதவியாக உள்ளது. மேலும் காரியாபட்டியின் கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நெல் நடவு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்த பகுதிகளில் கண்மாய் நிரம்பினால் நெல் நடவு பணி நன்றாக நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மதியம் 2.30 மணி முதல் 5 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

மலைப்பகுதியில் மிதமான மழை பெய்ததால் ஓடைப்பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சாரல் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திபட்டி, ராமசாமிபுரம், காந்திநகர், கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்