தமிழகத்தில் பரவலாக மழை; ஈரோட்டில் சூறாவளிக்காற்றால் வாழைகள், தென்னை மரங்கள் சேதம்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வாழைகள் நாசமாயின.
ஈரோடு,
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது.
அதன்பின்னர் இரவு8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 8.30 மணி வரை சுமார் அரை மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புதுக்காடு, கிழங்கு குழி, வட்டக்காடு காந்திநகர், விளாங்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சாகுபடி செய்திருந்த மொந்தன், ரொபஸ்டா ரகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.
விவசாயிகள் கவலை
மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் தோட்டங்களில் மூங்கில் கம்புகள் மீது படரவிடப்பட்டிருந்த 5 ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை கொடிகளும் கீழே விழுந்து நாசமானது.
வட்டக்காடுவில் உள்ள ஒரு தோட்டத்தில் சூறாவளிக்காற்றில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. மேலும் தென்னை மரம் முறிந்து விழுந்தது. புதுக்காடுவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அந்த பகுதி இருளில் மூழ்கியது.
நம்பியூர்
இதேபோல் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டுப்பாளையம், குருமந்தூர், காரப்பாடி, ஒட்டர் கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்து இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.