கரூரில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதேபோல் நேற்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் கருமேகங்கள் ஒன்று கூடி திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. மழை பெய்ததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டு சென்றதை காண முடிந்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் க.பரமத்தி ஒன்றியம் விஸ்வநாதபுரி, பவுத்திரம் ஊராட்சி பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.