கரூா் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
கரூர் பகுதியில் நேற்று முன்தினம் காைல முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கரூரில் நேற்று 2-வது நாளாக காலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மதியம் சூரியன் எட்டிப் பார்த்தது. மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் கரூரில் நேற்று காலை முதல் குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ஆங்காங்கே காற்று பலமாக வீசுவதாலும், மழை பெய்து வருவதாலும் மாணவர்கள் நலன் கருதி நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்தார்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று காலையில் இருந்து பரவலமாக மழை பெய்தது. இதனால் பலர் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். இதனால் தோகைமலை கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை தோகைமலை வாரச்சந்தை நடந்தது. மழையால் குறையான வியாபாரிகளே காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதில் ஒரு சில காய்கறிகள் குறைந்த விலையிலும், ஒரு சில காய்கறிகள் அதிக விலைக்கும் விற்பனையானது. இருப்பினும் மழையின் காரணமாக குறைவான பொதுமக்களுக்களே சந்தைக்கு வந்து சென்றனர். இதனால் வாரச்சந்தையில் நேற்று காய்கறி விற்பனை மந்தமாக நடந்தது.
நொய்யல்
நொய்யல், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், நத்தமேடு, குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், பேச்சிப்பாறை, நத்தமேடு, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோல் நேற்று காலை முதல் தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்கள் கடும் அவதி அடைந்தனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் சாலையில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அவதி அடைந்தனர். மேலும் இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம்,
காகிதபுரம், மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம்,
தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று 2-வது நாளாக காலை 6 மணியில் இருந்து விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.