கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை
கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரவலாக மழை
தமிழ்நாட்டின் மேல்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில் கரூரில் நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. அவ்வப்போது இடியும் இடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடைபிடித்து சென்றதை காணமுடிந்தது. இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், புகழிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இந்த மழையால் வெயின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 1 மணி நேரம் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி செய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-1.6, அரவக்குறிச்சி-22, அணைப்பாளையம்-3, க.பரமத்தி-23.6, குளித்தலை-17, தோகைமலை-18, கிருஷ்ணராயபுரம்-9, மாயனூர்-15, பஞ்சப்பட்டி-56.2, கடவூர்-11.2, பாலவிடுதி-8.4, மைலம்பட்டி-35.2. மொத்தம் 220.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.