தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இடி- மின்னலுடன் பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மழை
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை ஓட்டப்பிடாரத்தில் 2 மில்லி மீட்டரும், மணியாச்சியில் 21, எட்டயபுரம் 22.3, ஸ்ரீவைகுண்டம் 1, தூத்துக்குடி 2 மில்லி மீட்டரும் மழை பெய்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் நேற்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 20.6 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 8.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது.
இடி- மின்னலுடன்...
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் அடித்தது. மதியம் சுமார் 1 மணி அளவில் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது.
தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை 3-வது மைல் வரை வெளுத்து வாங்கிய மழை, நகருக்குள் வரவர பிசுபிசுத்து போய்விட்டது. பஸ் நிலையம் பகுதிகளில் எந்தவிதமான மழையும் பெய்யாமல் இயல்பாகவே காணப்பட்டது. இந்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.
சாயர்புரம்
சாயர்புரம் பகுதியில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாயர்புரம் பஜாரில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சுற்று வட்டார பகுதியிலும் மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியானதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.