தாயார் இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு பரோல் வழங்காதது ஏன்?
தண்டனைச்சட்ட விதிகளின்படி கைதிக்கு அவசர பரோல் வழங்குவதை சிறை சூப்பிரண்டு பரிசீலிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக சிறை சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தண்டனைச்சட்ட விதிகளின்படி கைதிக்கு அவசர பரோல் வழங்குவதை சிறை சூப்பிரண்டு பரிசீலிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக சிறை சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கைதியின் தாயார் இறப்பு
மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த கனிமொழி, மதுரை ஐகோர்ட்டில் நேற்று மாலை அவசர வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-
எனது சகோதரர் சுதர்சன் என்ற வெள்ளையன் (வயது 23). இவர் கஞ்சா வழக்கில் சிறை தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் என் தாயார் மகேஸ்வரி திடீரென இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வசதியாக சுதர்சனுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கக்கோரி சிறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அவர்கள் பரிசீலிக்கவில்லை. எனவே சுதர்சனுக்கு பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் விஜயகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் அவசர வழக்காக விசாரித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜராகி, மனுதாரரின் தாயார் 28-ந்தேதி மாலையில் சாலை விபத்தில் சிக்கி இறந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சுதர்சனுக்கு அவசர பரோல் கேட்ட மனுவை சிறை அதிகாரிகள் பரிசீலிக்க மறுத்துவிட்டனர் என வாதாடினார்.
பரிசீலிக்காதது ஏன்?
அதற்கு கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் சகோதரர் சுதர்சன் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதால்தான் சிறை அதிகாரிகள், மனுதாரரின் மனுவை பரிசீலிக்கவில்லை. அவரது தாயார் இறந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தமிழ்நாடு தண்டனைச்சட்ட விதிகளின்படி கைதிகளுக்கு அவசர கால விடுப்பு வழங்க சிறை சூப்பிரண்டுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி மனுதாரரின் தாயார் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் மனுதாரரின் சகோதரர் சுதர்சன் பங்கேற்க அவசர விடுப்பை சிறை சூப்பிரண்டு வழங்குவதை ஏன் பரிசீலிக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக வருகிற 1-ந்தேதி மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒருநாள் பரோல்
சுதர்சனுக்கு இன்று மாலை (29-ந்தேதி) 6 மணி முதல் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணி வரை பரோல் வழங்க வேண்டும். அவருக்கு உரிய பாதுகாப்பை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.