ஆரல்வாய்மொழி அருகே ரவுடியை கொடூரமாக கொன்றது ஏன்? தீர்த்துக்கட்டிய கும்பல் பற்றி பரபரப்பு தகவல்

ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-02-17 21:03 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ரவுடி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (வயது 34). பிரபல ரவுடி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த லிங்கவேல், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்த முடிவு செய்தார். இதற்காக லாயம் கைக்காட்டியில் இருந்து சந்தைவிளை செல்லும் சாலையில் உள்ள குடமுருட்டி ஓடை பகுதிக்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள் அதிலிருந்தபடி மது அருந்தினர்.

குத்திக்கொலை

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. வந்த வேகத்தில் திடீரென ராஜ்குமாரை நோக்கி பாய்ந்த அவர்கள் கத்தியால் குத்தினர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஜ்குமார் கத்திக்குத்து காயத்துடன் தப்பி ஓடினார். ஆனால் விடாமல் துரத்திய கும்பல் அருகில் உள்ள தென்னந்தோப்பில் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக குத்தியது. இடுப்பு, மார்பு, முதுகு, கழுத்து என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தன. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ராஜ்குமாரை குறி வைத்து தாக்கிய கும்பல், முதலில் அவருடைய நண்பர்களை விரட்டியுள்ளனர். அதில் ஒருவர் ஊருக்குள் வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன்பிறகு தான் நடந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை சூப்பிரண்டு நவீன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் ராஜ்குமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் மீது 2008-ம் ஆண்டு ராமன்புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர், 2010-ம் ஆண்டு ஈத்தாமொழி பூச்சி வளாகத்தை சேர்ந்த முருகன் என்ற சக்கை முருகன், 2019-ம் ஆண்டு தோவாளை தெக்கூர் முத்து என்ற மணிகண்டன், அவரது மனைவி கல்யாணி ஆகியோரை கொலை செய்த வழக்குகளும் மற்றும் அடிதடி வழக்குகளும் உள்ளன என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? என விசாரணையை முதலில் போலீசார் நடத்தினர். ஆனால் அதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் ராஜ்குமார் கொலை தொடர்பாக 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

பரபரப்பு தகவல்

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ராஜ்குமார் தனது நண்பர்களுடன் லாயம் கைகாட்டி பகுதியில் உள்ள சூப் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சந்தைவிளை தோப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு சென்ற போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று அவருக்கு தெரிந்த ஒருவரிடம் கூறியுள்ளார். உடனே அந்த நபர் ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கேட்டுள்ளார். அதற்கு ராஜ்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் இரவு 10 மணிக்கு ராஜ்குமார் அவரது நண்பர்களுடன் சந்தைவிளை தோப்பூர் சாலையில் உள்ள ஒரு இட்லி கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தோப்பூரை சேர்ந்த அதே நபர் வந்துள்ளார். அப்போதும் இருவருக்கிடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையை அருகில் நின்றவர்கள் விலக்கி விட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அப்புறம் தான் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ராஜ்குமாரை கண்காணித்து அந்த இளைஞர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல ரவுடியை நள்ளிரவில் கும்பல் தீர்த்துக் கட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்