பட்ஜெட் ஒப்புதலுக்கு மன்றத்தில் நகல் வழங்கப்படாதது ஏன்?
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டபோது பட்ஜெட்டின் நகல் தராதது ஏன்? என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டபோது பட்ஜெட்டின் நகல் தராதது ஏன்? என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
நகராட்சி கூட்டம்
விருதுநகர் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். விருதுநகர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி பகுதியை சுற்றியுள்ள பாவாலி, சிவஞானபுரம், ரோசல்பட்டி, கூரைக்குண்டு பஞ்சாயத்து பகுதிகளை இணைக்கவும் பரிந்துரை செய்யப்பட வேண்டுமென கவுன்சிலர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகியோர் வலியுறுத்தினர்.
வரி வசூல்
வரிவசூலில் சுறுசுறுப்பு காட்டும் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களிடமும் கட்டணம் வசூலிப்பதாகவும், குடிநீர் இணைப்பு வழங்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கவுன்சிலர் கலையரசன் புகார் கூறினார்.
பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தலைவர் மாதவன் விளக்கமளித்தார். நகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மன்றத்தின் ஒப்புதலுக்கான தீர்மானத்தின் மீது பேசிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ஆறுமுகம், மதியழகன், முத்துலட்சுமி ஆகியோர் பட்ஜெட் நகல் தாக்கல் செய்யப்படாமல் ஒப்புதல் கேட்பது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
காலை சிற்றுண்டி
நகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி அகமதுநகர் மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்தில் தயாரிப்பது ஏற்புடையதல்ல. குடிநீர் வளாகம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் கவுன்சிலர் ஆறுமுகம் சுட்டிக்காட்டினார். இது தற்காலிகமான ஏற்பாடு என தலைவர் விளக்கமளித்தார். விவாதத்திற்கு பின் 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.