''அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்?" - பழனிசாமி தரப்பிற்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி
அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறி, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அதே பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் கோர்ட்டை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கில் இருந்து விலகினார்.
தனி நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கில் இருந்து விலகியதையடுத்து அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் முதலில்வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால், முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமிக்கு தரப்பிடம் நீதிபதி கூறினார்.
பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலும் செல்லாததாகி விடுமா என விளக்க வேண்டும் என நீதிபதி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வலியுறுத்தினார்.