தேனி அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்தது ஏன்?; கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

தேனி அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2023-08-27 21:15 GMT

தேனி அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

எலக்ட்ரீசியன் கொலை

தேனி அருகே டொம்புச்சேரியை சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (வயது 36). இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி இலக்கியா. அவர் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் டொம்புச்சேரியில் தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் நேற்று முன்தினம் ராஜா டொம்புச்சேரிக்கு வந்தார். இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு தனது வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் பிரவீன் (23), ஆண்டவர் மகன் தினேஷ்குமார் (25) ஆகியோருக்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரும் ராஜாவை தாக்கினர். பின்னர் பிரவீன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை சரமாரியாக குத்தினார்.

பின்னர் பிரவீன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த ராஜா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கள்ளத்தொடர்பு

இந்த கொலை குறித்து ராஜாவின் தந்தை கருப்பையா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "தனது மூத்த மகன் மருதமுத்துவின் மனைவியான வீரலட்சுமிக்கும், பிரவீனுக்கும் இடையே தொடர்பு இருந்தது. இதனால், எனது மகன்கள் பிரவீனை கண்டித்தனர். ஆனாலும் அவர் வீரலட்சுமியுடன் தொடர்பை துண்டிக்கவில்லை. ஊர் மக்கள் சிலர் பிரவீனை கண்டித்தனர். இந்தநிலையில், வீரலட்சுமி கோபித்துக்கொண்டு வருசநாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், பிரவீனும், அவருடைய உறவினரான தினேஷ்குமாரும் சேர்ந்து எனது மகன் ராஜாவிடம் தகராறு செய்து அவரை கொலை செய்துவிட்டனர்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பிரவீன், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வீரலட்சுமியுடன் பிரவீனுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பை கண்டித்ததாலும், அவர் தனது கணவருடன் சண்டைபோட்டுவிட்டு வருசநாடு சென்று விட்டதால் ஏற்பட்ட கோபத்தாலும் ராஜாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்