அமைச்சர் செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் எழுதிய 5 பக்க கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டது ஏன் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி 5 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-06-30 20:49 GMT

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இருதய நோய் காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் (வாபஸ் பெறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு எழுதியது) கூறப்பட்டு இருப்பதாவது:-

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கடந்த மே 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கடுமையான கருத்தை பகிர்ந்துள்ளது. சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்வதில் இருந்து தன்னை பாதுகாப்பதற்கு செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளது. குற்ற வழக்கை அவர் எதிர்கொள்ளும் நிலையில், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், அரசியல் சாசன அறநெறிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையிலும், மனசாட்சியின்படியும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

ஏமாற்றம் அளித்த பதில்

எனது நியாயமான ஆலோசனையை நீங்கள் தவிர்த்துவிட்டு 1.6.2023 அன்று எனக்கு கோபமூட்டுகிற வகையில் கடிதம் எழுதினீர்கள். எனது அறிவுரையை தகுந்தபடி பரிசீலிப்பதை தவிர்த்துவிட்டு, வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தி, நான் அரசியல் சாசன அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக என்னை குற்றம்சாட்டியுள்ளீர்கள். இந்த உங்களது பதில் எனக்கு ஏமாற்றம் அளித்தது.

ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் அமைச்சர் பணியை மேற்கொள்ள முடியாது என்று கூறி, அவர் வகித்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி 15.6.2023 அன்று எனக்கு கடிதம் எழுதினீர்கள். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்றும் கூறியிருந்தீர்கள்.

அதிர்ச்சி

ஆனால் அமலாக்கத்துறையினால் 14.6.2023 அன்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட உண்மையை நீங்கள் அதில் குறிப்பிடவில்லை. சிகிச்சையில் இருக்கும்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஏற்கனவே வெளியுலகில் பரவியிருந்த தகவலையும் நீங்கள் குறிப்பிடவில்லை. முக்கிய தகவல்கள் உங்கள் கடிதத்தில் இல்லாததாலும், செந்தில் பாலாஜியின் இலாகாக்களை திரும்ப பெறுவதற்கான பரிந்துரையை செய்வதற்கு எழுந்த சூழ்நிலை பற்றியும் கேட்டு, முழு விவரங்களை அனுப்பும்படி 15.6.2023 அன்று உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

ஆனால் நான் கேட்ட விவரங்களைத்தர நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நீங்கள் 15.6.2023 அன்று எழுதிய கடிதம் மறுநாளில் எனக்கு கிடைத்தது. அதில், நீங்கள் எழுதிய கடிதத்தின்படி நான் எந்த காலதாமதமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று என்னை வற்புறுத்தியதோடு, விரும்பத்தகாத சொற்களையும் பயன்படுத்தி இருந்தீர்கள். செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கும் உங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில், அவர் அமைச்சராக தொடர்ந்து நீடிப்பதை நான் ஏற்கவில்லை. அதற்கு காரணம், வழக்கில் நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீங்கள் நீக்க மறுத்ததும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதாக நீங்கள் அறிவிப்பாணை வெளியிட்டதும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜியின் நடத்தை பற்றி, மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு சில எதிர்மறையான கருத்துகளை கூறியுள்ளது. அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை மற்றும் நீதிபரிபாலனைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை சுட்டிக்காட்டி, மீண்டும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்துகளை கூறியும்கூட, அவரை நீங்கள் அமைச்சராக வைத்திருக்கிறீர்கள். அது அவரை, மத்திய விசாரணை முகமையான வருமான வரித்துறையினரைக்கூட மிரட்டித் தடுக்கும் அளவுக்கு தைரியத்தை அளித்துள்ளது.

செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அதை அவரின் ஆதரவாளர்கள் தடுத்ததோடு, அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தி, மதிப்புள்ள பல ஆவணங்களை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சூழ்நிலையில் உள்ளூர் போலீசாரின் தேவையான உதவி கிடைக்காத நிலையில், சி.ஆர்.பி.எப்.-ன் உதவியை கோரும் அளவிற்கு வருமான வரித்துறை அதிகாரிகளின் நிலை மோசமாகிவிட்டது.

போதுமான காரணங்கள்

சாதாரண சூழ்நிலைகளில் ஒரு கவர்னர், அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த நிகழ்வில் உங்களது ஆலோசனை, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க செய்ய வேண்டும் என்ற உங்கள் வலியுறுத்தல், எனது ஆலோசனைக்கு எதிராக உங்களது ஆரோக்கியமற்ற ஒருதலைப்பட்ச நிலையை எதிரொலிக்கிறது.

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர்ந்து தடுப்பார் என்றும், நீதிபரிபாலனைக்கு இடையூறு ஏற்படுத்துவார் என்றும் சந்தேகப்படுவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகள் இறுதியில், மாநிலத்தில் இயங்கும் அரசியல் சாசன செயல்பாட்டை சீர்குலைத்துவிடும்.

எனவே இந்த சூழ்நிலையில் எனக்கு அரசியல் சாசனத்தின் 154, 163 மற்றும் 164 ஆகிய பிரிவுகள் அளித்துள்ள அதிகாரத்தின்படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்