பல்வேறு புகார்களில் பதிவாகும் வழக்குகளுக்கு ஒரே சட்டப்பிரிவை பயன்படுத்துவது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி
பல்வேறு புகார்களில் பதிவாகும் வழக்குகளுக்கு ஒரே சட்டப்பிரிவை பயன்படுத்துவது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
பல்வேறு புகார்களில் பதிவாகும் வழக்குகளுக்கு ஒரே சட்டப்பிரிவை பயன்படுத்துவது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
நடவடிக்கை
சிவகங்கையை சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் கூத்தலூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் உள்ள கோவிலில் வழிபாடு நடத்த விடாமல் என்னை ஊராட்சி தலைவர் மற்றும் அவரது தரப்பினர் தாக்கினர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது நான் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு எதிர்தரப்பினர் அடியாட்கள் மூலமாக மிரட்டி வருகின்றனர். எனவே வழக்கில் சிக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஒரே சட்டப்பிரிவு
இந்த வழக்கு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து நீதிபதி, பல்வேறு பிரச்சினைகள் குறித்து புகார் அடிப்படையில் பதிவாகும் வழக்குகள், ஒரே மாதிரியான சட்டப்பிரிவை பயன்படுத்தி, வழக்கை பதிவு செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கப்படும் போது, அதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாமே? என அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.