வீட்டு வாடகை ரூ.3¾ லட்சத்தை கொடுப்பது யார்? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

வீட்டு வாடகை மாதம் ரூ.3¾ லட்சத்தை கொடுப்பது யார்? என்று அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-04-14 23:20 GMT

கோவை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ளமாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது?. எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.

வீட்டு வாடகை ரூ.3¾ லட்சம்

அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3¾ லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகிறதா? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4½ லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாகவும் அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?

கோர்ட்டில் வழக்கு

அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழ்கிறீர்கள்.

என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்