பெண்ணை கொன்று நகையை பறித்து சென்றது யார்?

பெண்ணை கொன்று நகையை பறித்து சென்றது யார்?

Update: 2023-07-29 19:00 GMT

பீளமேடு

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகையை பறித்துச் சென்றது யார்? என்பது குறித்து 5 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் படுகொலை

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் பெயிண்டிங் காண்டிராக்டர் ஆவார்.

இவருடைய மனைவி ஜெகதீஷ்வரி (வயது 40). இவர்களுக்கு கார்த்திகா (16) என்ற மகள் உள்ளார். கார்த்திகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சக்கரவர்த்தி பெயிண்டிங் வேலை விஷயமாக அன்னூருக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார். இதனால் வீட்டில் ஜெகதீஷ்வரியும், அவரது மகளும் மட்டுமே தனியாக இருந்து வந்தனர்.

ஜெகதீஷ்வரி தினமும் தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதும், பள்ளி முடிந்த பின்னர் திரும்ப சென்று அழைத்து வருவதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் தனது மகளை காலையில் பள்ளியில் கொண்டு விட்டார். பின்னர் வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதற்கிடையே பள்ளிக்கூடம் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு தன்னை அழைக்க வரும் தாய் வராததால் ஜெகதீஷ்வரியின் மகள் நடந்தே வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது வீடு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. வீட்டிற்குள் சென்று அம்மாவை தேடினார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

காரணம் என்ன?

இதை பார்த்ததும் கார்த்திகா கதறி அழுதபடி வெளியில் ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்து பார்த்தனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து சக்கரவர்த்தியும் அன்னூரில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது கழுத்து இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்து இருந்த நகைகள், பீரோவில் வைத்து இருந்த நகைகள் உள்பட 5 ¾ பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.

இதனால் இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து, ஜெகதீஷ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை பறித்துச் சென்று உள்ளார்களா? அல்லது வேறு ஏதாவாறு காரணமாக ஜெகதீஷ்வரியை கொன்று விட்டு போலீசாரை திசைதிருப்ப நகைக்காக கொலை நடந்ததாக நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தனிப்படை தீவிர விசாரணை

அத்துடன் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்து சென்றது யார்? என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளி வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மொத்தம் 2 மணிநேரம் கொலையாளி வீட்டில் இருந்துள்ளான். எனவே தெரிந்த நபர்தான் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த கொலை பணத்திற் காகவா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம ஆசாமிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட ஜெகதீஷ்வரியின் மகள் தான் கடைசியாக தனது தாய் பிணமாக கிடப்பதை பார்த்து உள்ளார். இதனால் அவருக்கு சற்று உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் நெருங்கிவிட்டார்கள். விரைவில் சிக்குவார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்