மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் யார்? -தமிழக அரசு விளக்கம்
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றி அமைக்கப்படுவதாகவும், அதன்மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ரூ.1,000, அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் அரசு செய்து வருகிறது. இந்தநிலையில் இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவிகள் யார்? என்பது தொடர்பான விளக்கங்களை தமிழக அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நோக்கம் என்ன?
பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்கவும், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர்கல்வியால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்யவும், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
பயன்பெறும் மாணவிகள் யார்?
இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகள் 6 முதல் பிளஸ்-2 வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும். தனியார் பள்ளியில் ஆர்.டி.இ.-ன் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தபின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளும் பயன்பெறலாம்.
அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினர் நலன், கள்ளர் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
மாணவிகள் 8 அல்லது 10 அல்லது பிளஸ்-2 வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது.
முதுநிலை மாணவிகளுக்கு கிடையாது
2022-23-ம் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டில் இருந்து 2-ம் ஆண்டுக்கும், 2-ம் ஆண்டிலிருந்து 3-ம் ஆண்டுக்கும் செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவிகளும், தொழிற்கல்வியில் 3-ம் ஆண்டில் இருந்து 4-ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும், மருத்துவக்கல்வியை பொறுத்தமட்டில், 4-ம் ஆண்டில் இருந்து 5-ம் ஆண்டுக்கு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
2021-22-ம் ஆண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனென்றால், அவர்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் இளநிலை படிப்பை நிறைவு செய்துவிடுவார்கள். இளநிலை படிப்பு படிக்கும் மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தின் பயன்பெறமுடியும். முதுநிலை மாணவிகளுக்கு கிடையாது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். பயன்பெற தகுதியான மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.