வேகத்தடைகளில் வெள்ளை நிற அடையாள குறியீடு

மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் வேகத்தடைகளில் அடையாள குறியீடு இல்லாததால் விபத்துகள் ஏற்பட்டன. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக விபத்தை தவிர்க்க வேகத்தடைகள் மீது வெள்ளை நிற அடையாள குறியீடு வரையப்பட்டு உள்ளது.

Update: 2022-12-21 18:45 GMT

கூடலூர், 

மசினகுடி-ஊட்டி நெடுஞ்சாலையில் வேகத்தடைகளில் அடையாள குறியீடு இல்லாததால் விபத்துகள் ஏற்பட்டன. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக விபத்தை தவிர்க்க வேகத்தடைகள் மீது வெள்ளை நிற அடையாள குறியீடு வரையப்பட்டு உள்ளது.

தொடர் விபத்துகள்

மசினகுடியில் இருந்து ஊட்டிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் செங்குத்தான மலைப்பாதை என்பதால் விபத்துகள் நடைபெற வாய்ப்பு உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதோடு, அடையாளக் குறியீடுகள் நெடுஞ்சாலை துறையால் போடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கல்லட்டி பகுதியில் இருந்து மசினகுடிக்கு வரும் சாலையில் வாகனங்கள் அதி வேகமாக வருவதை தடுக்க 7 கி.மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், அதன் மீது அடையாளக் குறியீடு வரையப்படாமல் இருந்தது. இதனால் வேகத்தடைகள் இருப்பது தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வந்தனர். சிலர் காயத்துடன் உயிர் தப்பி சென்றனர். இதனால் அடையாளக் குறியீடு வரைய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

அடையாள குறியீடு

கண்ணுக்கு தெரியாத வேகத்தடையால் விபத்து அபாயம் ஏற்படும் என்பது குறித்து 'தினத்தந்தி'யில் கடந்த 18-ந் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதிய வேகத்தடைகள் மீது அடையாளக் குறியீடு வரைவதற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து புதிய வேகத்தடைகள் மீது வெள்ளை நிற அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய இடங்களில் சாலையின் இருபுறமும் இரவில் ஒளிரும் வகையில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

அதிகாரிகளின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் மக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்