மோட்டார்சைக்கிளில் சென்றபோதுமேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவுஈரோட்டில் பரிதாபம்
கீழே விழுந்த வாலிபர் சாவு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 20). இவர் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று காலையில் தினேஷ்குமார் வழக்கம்போல் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவர் பன்னீர்செல்வம் பூங்கா வழியாக பழையபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி பாலத்தின் ஓரமாக உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
கீழே விழுந்தார்
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமார் சவிதா சிக்னல் பகுதியில் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மேம்பாலத்தில் கிடந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தினேஷ்குமாரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன்அளிக்காமல் தினேஷ்குமார் மதியம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.