திருத்தங்கல் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

திருத்தங்கலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது.

Update: 2023-04-29 19:04 GMT

சிவகாசி,

திருத்தங்கலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது.

பஸ் நிலையம்

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.3 கோடியே 69 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 29.1.2016-ல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பின்னர் சிறிது நாள் சிவகாசியில் இருந்து விருதுநகர் வழியாக வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், மதுரையில் இருந்து சிவகாசி வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வந்தது.

இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் அப்போதைய திருத்தங்கல் நகராட்சிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைத்தது. கடைகள் திறக்கப்படாத நிலையிலும் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் உரிய வாடகையை செலுத்தி வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள திருத்தங்கல் பஸ் நிலையம் செயல்படுத்த தற்போது புதிதாக மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்றுள்ள சங்கரன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் 4 இடங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க புதிய பஸ் நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும். திருத்தங்கல் பயணிகள் பஸ் நிலையத்தில் வந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்போது பஸ் நிலையம் செயல்படாத நிலையில் இருப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் அங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது. இங்கு சில சமூக விரோத செயல்கள் நடக்கிறது. ஆதலால் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்