ரோப் கார் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?

கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.13 கோடியில் ரோப்கார் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

Update: 2023-08-27 23:15 GMT


துடியலூர்


கோவை அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.13 கோடியில் ரோப்கார் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.


அனுவாவி கோவில்


கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்த அவர், அங்கு ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம் ரோப் கார் வசதி அமைக்கலாமா? அப்படி அமைத்தால் அடிவாரத்தில் எந்த பகுதியில் அமைக்கலாம்?, என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


ரோப் கார் வசதி


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மலை மீது இருக்கும் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ரோப் கார் வசதி அல்லது லிப்ட் வசதி அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.


பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும், 560 படிகள் கொண்ட மலை மீது இருக்கும் முருகரும், சிவனும் குடிகொண்டு இருக்கும் புகழ்வாய்ந்த அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரோப் கார் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. இங்கு தமிழக தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.


ரூ.13 கோடி


அதில் ரூ.13 கோடியில் 420 மீட்டர் உயரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறி உள்ளனர். அதற்கான அறிக்கை பெற்றதும் இந்த கோவிலில் ரோப் கார் வசதி அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும் இந்த கோவில் அருகே காட்டு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்த பணிகள் நடைபெறும்போது, இந்த கோவிலில் பக்தர்களுக்கு வசதியாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 922 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.5,135 கோடி மதிப்பிலான கோவிலுக்கு சொந்தமான 5,335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தண்டு மாரியம்மன் கோவில்


தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கோவையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொ.ரமேஷ், செயற்பொறியாளர் மதிவாணன், உதவி ஆணையர் கருணாநிதி, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அதிகாரி பிரபாகரன், அறங்காவலர் நா.ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்