கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்குமா?

கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-08-23 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கடைமடை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி காவிரி பாசனத்தின் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து அணைக்கரைக்கு வந்த பின்னர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த வருடம் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி வழியே பூம்புகார்க்கு சென்று கடலில் சங்கமித்தது. ஆனால் பாசனத்திற்கான தண்ணீர் கடைமடை பகுதிக்கு இன்னும் திறந்து விடப்படவில்லை.

அணைக்கரையிலிருந்து திறந்து விடப்பட்டால் தான் கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். அதிலும் வழக்கமாக ஆண்டு தோறும் மற்ற பகுதிகளை போல அல்லாமல் காலம் தாழ்த்தி தான் தண்ணீர் வந்து சேரும். இதனை கருதியே கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் மற்ற இடங்களை விட சில நாட்கள் தள்ளியே சம்பா நெற்பயிரை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைவில் வந்து சேர்ந்துவிடும் என்று விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி தண்ணீர் வந்து சேருமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஜூன் மாதம் 12-ந்் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது வரை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

ஏக்கத்தில் விவசாயிகள்

இது குறித்து வேளாண் மற்றும் நீர்வளத் துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் தான் தண்ணீர் பாசனத்துக்கு வந்து சேரும். அதன்படி மேட்டூர் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போதைய சூழ்நிலையில் மழை குறைந்து காணப்பட்டாலும் சில தினங்களில் அப்பகுதியில் போதிய மழையை எதிர்பார்த்து வருகிறோம். அப்படி பருவ மழை பெய்யும் போது மேட்டூர் அணையில் விரைவாக நீர்மட்டம் உயர்ந்து கடைமடை பகுதிக்கும் பாசனத்திற்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும்.அதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யும் பணியில் தொய்வின்றி தொடர்ந்து ஈடுபடலாம் என்றனர். இதனால் வாய்க்கால் பாசனத்தையே நம்பி எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் தற்போது பெரும் ஏக்கத்தில் இருந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்