மூடி கிடக்கும் சோதனைச்சாவடி கட்டிடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மூடி கிடக்கும் சோதனைச்சாவடி கட்டிடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-11-20 18:45 GMT

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மூடி கிடக்கும் சோதனைச்சாவடி கட்டிடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சோதனைச்சாவடி

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் அட்டகட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி கட்டிடம் அமைக்கப்பட்டது. இது கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், அந்த சோதனைச்சாவடி கட்டிடம் மூடி கிடக்கிறது. இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில் வெளியூர்களில் குற்றம் செய்துவிட்டு வால்பாறைக்குள் தப்பி வரும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தி பிடிக்க புதிய சோதனைச்சாவடி கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் புதிதாக அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே அட்டகட்டி பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியை பயன்படுத்தலாம் என்று பொதுமக்கள் யோசனை கூறி வருகின்றனர்.

குற்றவாளிகள் கண்காணிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மலைப்பிரதேசமான வால்பாறையில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் குற்றவாளிகளும் வந்து பதுங்கி கொள்கின்றனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகே அவர்கள் குற்றவாளிகள் என்பது தெரியவருகிறது. அதற்குள் அவர்கள் வால்பாறையிலும் குற்ற சம்பவங்களை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில், எல்லைப்பகுதியிலேயே கண்காணிப்பை தீவிரப்படுத்தி அவர்களை பிடித்துவிட வேண்டும். இதற்கு அட்டகட்டி பகுதியில் பயனின்றி மூடி கிடக்கும் சோதனைச்சாவடி கட்டிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதை போலீசாரிடம், நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்தால், அந்த பணிக்கு உதவியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்