மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது?

கூடலூர்-மசினகுடி இடையே மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-03 18:45 GMT

கூடலூர்-மசினகுடி இடையே மாயாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இரும்பு பாலம்

கர்நாடகா, கேரளா மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் விளங்குகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வழியாக மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

அந்த வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. பழமையான பாலம் என்பதால் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஆங்கிலேயர் கால பாலம் வழியாக கனரக வாகனங்கள் இயக்க கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் நாளுக்கு நாள் பாலம் பழுதடைந்து உடைந்து விழும் அபாயம் காணப்பட்டது. இதனால் பழைய இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பழமையான பாலம் அகற்றப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

அதன்பின்னர் தெப்பக்காடு வனத்துறை விடுதிகள் அருகே உள்ள தரை பாலம் வழியாக வாகனங்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய பாலம் கட்டுவதற்காக ஆரம்ப பணிகள் தொடங்கப்பட்டது. இதனிடையே பழமையான இரும்பு பாலத்தில் உள்ள தளவாட பொருட்களை விதிமுறைகளை மீறி சிலர் எடுத்துச் சென்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கூடலூர் பகுதியில் பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்க முடியாமல் போனது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் கூடலூருக்கு வர முடியாத நிலை இருந்தது. இதேபோல் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. மேலும் வணிக ரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டது.

விரைந்து முடிக்க வேண்டும்

இதனால் புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூடலூர், மசினகுடி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பாலம் கட்டுமான பணி இதுவரை தொடங்கவில்லை. தற்போது பனி மற்றும் கோடை காலம் தொடங்கி விட்டது. மாயாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதை பயன்படுத்தி தெப்பக்காடு மாயாற்றின் குறுக்கே புதிய சிமெண்ட் பாலம் கட்டுமான பணியை விரைவாக மேற்கொண்டு கோடை காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

மசினகுடி வரதராஜ்:-

மசினகுடி பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய மற்றும் அலுவலக தேவைகளுக்கு தினமும் கூடலூர் சென்று வருகின்றனர். இதுதவிர கல்வி, மருத்துவம், பணி உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு செல்கின்றனர். சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகையை பொறுத்து மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடந்த தென்ேமற்கு பருவமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மாயாற்றை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அப்போது சுற்றுலா பயணிகள் வருகை முழுமையாக தடைபட்டது. இதனால் வணிக ரீதியாக அனைத்து தொழில்களும் முடங்கியது. மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடிய வில்லை. அடுத்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்குள் புதிய பாலத்தை கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

மருத்துவ சிகிச்சை

கூடலூர் சியாமளன்:-

கூடலூர்-மசினகுடியை இணைக்கக்கூடிய பாலம் கடந்த ஆண்டு உடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொக்காபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு முக்கிய நாட்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்தனர். மேலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும், நோயாளிகள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியாமலும் தவித்தனர்.

உடைத்த இடத்தில் புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்ததோடு நிற்கிறது. இதனால் வெள்ளம் ஏற்படும் போது கடக்க முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, புதிய பாலம் அமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும்.

60 கிலோ மீட்டர் தூரம்

மசினகுடி ஜெயக்குமார்:-

மசினகுடி வழியாக கூடலூருக்கு தினமும் சென்று வருகிறேன். தற்போது பயன்படுத்தப்படும் தரைப்பாலமும் மிகவும் பழுதடைந்து விட்டது. மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.

இதனால் சுற்றுலா வாகன தொழில் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகிறது. பாலம் அமைக்கப்படாததால், கூடலூரில் இருந்து பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தலைகுந்தா வழியாக 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்குள் காலதாமதம் இன்றி பாலத்தை கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல் கூடலூர் சரவணன்:-

தெப்பக்காடு மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டாமல் உள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. கோடை காலத்தை பயன்படுத்தி பாலம் விரைவாக தரமாக கட்ட வேண்டும். அடுத்த ஆண்டு மழைக்காலம் தொடங்கினால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் பாலம் கட்டும் பணி மீண்டும் தாமதமாகும். பொதுமக்களின் நலன் கருதி உரிய தீர்வு காண வேண்டும். இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக தொடர் கனமழையால் பல இடங்களில் பாலங்கள் உடைந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பாலங்களை உடனடியாக கட்ட வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்