இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது எப்போது? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது எப்போது? என்பது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
மதுரை,
புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களின் பொருட்களை அரசு வாங்குவதால் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். புதிய நிறுவனங்களின் வசதிக்காக டெண்டர் விதிமுறைகள் மாற்றப்படும். மக்களுக்கான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு. ஆன்லைன் மூலம் சேவை பெற முடியாதவர்களுக்கு அவர்கள் இல்லம் தேடி சேவை செய்ய வேண்டும்.
மாதந்தோறும் ரூ.1,000
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதை எவ்வளவு சீக்கிரம், கொடுக்க முடியுமா அவ்வளவு சீக்கிரம் கொடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். அதற்காக விரிவான பணி நடந்து கொண்டு இருக்கிறது. உறுதியாக ஒன்று மட்டும் சொல்கிறேன். அனைத்திற்கும் 'டேட்டா'தான் முக்கியம். மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள்? என பார்க்க வேண்டும்.
எனவே டேட்டாவை தெளிவுப்படுத்தி, சுத்தப்படுத்துவதுதான் அதில் முதல் பணியாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.