ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்வு எப்போது? - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (டெட்) 2 கட்டங்களாக நடத்தி வருகிறது.
சென்னை,
ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை (டெட்) 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. இதில் தாள்-1 தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கும், தாள்-2 தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது.
அதன்படி, தாள்-1 தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு கம்ப்யூட்டர் வாயிலாக கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி வெளியிடப்பட்டது. ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேர் எழுதியதில், 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தாள்-2-க்கான தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று விண்ணப்பித்தவர்கள் காத்திருந்தனர். இதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கம்ப்யூட்டர் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, தேர்வு வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வு கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த அறிவிப்பு வருகிற 3-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், இந்த தேர்வுக்கான பயிற்சித் தேர்வு பெற விரும்புபவர்களுக்கு தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.