கறம்பக்குடி தாலுகாவுக்கான வசதிகள் கிடைப்பது எப்போது?
கறம்பக்குடி தாலுகாவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான வசதிகள் கிடைப்பது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடை கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதியாக கறம்பக்குடி உள்ளது. இத்தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்து உள்ள 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இங்கு கறம்பக்குடி, மழையூர் என 2 வருவாய் பிர்கா உள்ளது. ஆலங்குடி தாலுகாவுடன் இணைந்து இருந்த கறம்பக்குடி ஒன்றியம் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பின்னர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. முந்தைய ஆட்சிகாலத்தில் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது.
பஸ் நிலையம் கூட கிடையாது
கறம்பக்குடி தாலுகாவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் தாலுகாவிற்கான வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை என்பது இப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது. தொடக்கத்தில் கறம்பக்குடி பேரூராட்சி சமுதாய கூடத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு அப்பால் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. பஸ் நிலையம் கூட இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மகளிர் காவல் நிலையம் இல்லை
தாலுகாவாகியும் போக்குவரத்து போலீசார் இல்லை. மகளிர் காவல் நிலையம் இல்லை. கோர்ட்டு இன்னும் தொடங்கப்படவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகம் இல்லை போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி தாலுகாவிற்கான அனைத்து வசதிகளும் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கறம்பக்குடி பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
போக்குவரத்து நெருக்கடி
கே.சுரேஷ்:- கறம்பக்குடி வளர்ந்து வருகிற வர்த்தக நகரமாகும். இத் தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்களும் வர்த்தக மற்றும் மற்ற வேலை களுக்கு கறம்பக்குடிக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கறம்பக்குடி ஜன நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது. எனவே அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விபத்துகளும் தொடர்ந்து வருகிறது. எனவே கறம்பக்குடியில் போக்குவரத்து காவல் பிரிவை ஏற்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்க வேண்டும்.
மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்
தி.க.முத்து:- கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கறம்பக்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது. கறம்பக்குடி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாலுகா தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தாலுகா மருத்துவமனைக்கான எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. டாக்டர்கள், செவிலியர்கள் போதுமான அளவு இல்லை. மருத்துவ உபகரணங்களும் இல்லை. எனவே கூடுதல் டாக்டர் நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மேலும் கறம்பக்குடி பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் இருப்பதால் இங்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை உருவாக்க வேண்டும்.
அரசு அலுவலர் குடியிருப்பு கட்ட வேண்டும்
பிரகாஷ்சோழன்:- கறம்பக்குடி யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அரசு அலுவலர் குடியிருப்பு பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதனால் வருவாய்த்துறை உள்ளிட்ட பொதுஜன தொடர்பு அலுவலர்கள் தாலுகா தலைமை இடத்தில் தங்கி சேவை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய அரசு அலுவலர் குடியிருப்பு கட்டவேண்டும். மேலும் கறம்பக்குடி நகர பகுதியில் அமையவேண்டிய அரசு கல்லூரி உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்கள் போதிய இட வசதி இல்லாததால் கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை கண்டறிந்து அரசு சார்ந்த கட்டிடங்கள் இங்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை சூப்பிரண்டு அலுவலகம்
ரோஸ்சினி அப்துல்லா:- கறம்பக்குடி பகுதியில் பெண்கள் மீதான வன்முறை, வரதட்சனை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் கறம்பக்குடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாததால் எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம், முதலிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆலங்குடி 40 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இதனால் பல குற்றச்செயல் தொடர்பாக புகார் அளிக்க முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர். எனவே கறம்பக்குடியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
மேலும் கறம்பக்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.