கோவை மாநகராட்சி பகுதியில் உரம் உற்பத்தி கூடங்கள் செயல்படுவது எப்போது?
கோவை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட 27 நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் செயல்படுவது எப்போது என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட 27 நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் செயல்படுவது எப்போது என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலைபோல் குவியும் குப்பைகள்
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் அந்தந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளுக்கும் சேர்த்து 60 இடங்களில் மைக்ரோ கம்போசிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் தயாரிப்பு கூடம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் தற்போது 34 கூடங்கள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் 7 இடங்களில் உள்ள கூடங்களில் மட்டுமே மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 27 கூடங்களும் செயல்படாமல் கிடக்கின்றன. இதனால் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவையில் 34 இடங்களில் நுண்ணுயிர் கூடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் உழவர் சந்தை, கோவைபுதூர், கே.ஏ.ராமசாமி நகர், கவுண்டம்பாளையம், ஓணபாளையம் ஆகிய 7 இடங்களில் இந்த நுண்ணுயிர் கூடம் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. இங்கு காய்கறிகள், பழங்கள் உள்பட மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 27 நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடங்களுக்கு மக்காத குப்பைகளை அரைக்கும் எந்திரம் உள்பட பல்வேறு உபகரணங்கள் வாங்க வேண்டியது உள்ளது. இந்த உபகரணங்கள் வாங்கப்பட்டதும் அந்த கூடங்கள் செயல்பாட்டிற்கு வரும். இதன்மூலம் கோவை மாநகரில் சேகரமாகும் குப்பைகள் வெள்ளலூருக்கு மொத்தமாக கொண்டு செல்வது குறையும். இவ்வாறு அவர் கூறினார்.