கோதுமை உற்பத்தி அதிகரித்து இருந்தாலும் விலை உயர்ந்து வருகிறது
வடமாநிலங்களில் கோதுமை உற்பத்தி அதிகரித்து இருந்தாலும் விலை உயர்ந்து வருகிறது
வட மாநிலங்களில் கோதுமை உற்பத்தி அதிகரித்து இருந்தாலும் விவசாயிகள் அதிக விற்பனை விலையை எதிர்பார்த்து வெளிச்சந்தையில் விற்க தயங்குவதால் கோதுமையின் விலை உயர வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அதிகரிப்பு
இதுபற்றி அவர்கள் தெரிவித்ததாவது:-
கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரித்துள்ள நிலையில் 112.18 மில்லியன் டன் கோதுமை நடப்பு மாதம் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,125 என நிர்ணயித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு விவசாயிகள் கோதுமை குவிண்டால் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளனர். நடப்பு ஆண்டிலும் அதே விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து கோதுமையை விற்பனை செய்ய தயாராக இல்லை. ஆனாலும் சில பகுதிகளில் வியாபாரிகள் கோதுமையை விவசாயிகள் வீட்டிற்கே சென்று குவிண்டால் ரூ.2,400-க்கு கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர்.
வெளிச்சந்தை
கடந்த 8-ந் தேதி கோதுமையின் விலை குவிண்டால் ரூ.2,240 ஆக இருந்த நிலையில் தற்போது மே 18-ந் தேதி கோதுமையின் விலை குவிண்டால் ரூ.2,350 ஆக உயர்ந்துள்ளது. எனவே விவசாயிகள் இன்னும் விலைஉயரும் என எதிர்பார்த்து காத்து இருப்பதில் தவறில்லை என்று கருத வேண்டி உள்ளது.
மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் இதுவரை 24 மில்லியன் டன் கோதுமையை பொது வினியோகத்திற்காக கொள்முதல் செய்துள்ளது. எனவே பொது வினியோகத்திற்கான கோதுமையில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனாலும் மத்திய அரசு வரும் ஜூலை மாதம் வெளிச்சந்தையில் இந்திய உணவு பாதுகாப்பு கழகம் மூலம் கோதுமையை விற்பனை செய்ய முன்வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அப்போது வேண்டுமானால் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரை கோதுமை விலை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.