ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்த வழக்கில் 6 வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-27 10:30 GMT

சென்னை,

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஐகோர்ட்டு வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, திறமைக்கான விளையாட்டுக்கும், அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். ரம்மி என்பது திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ரம்மியை அதிர்ஷ்ட விளையாட்டாக இந்த சட்டத்தில் வகைப்படுத்தியது தவறு என்று அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தற்கொலை நிகழ்கின்றன, பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன என்ற சூழலில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ததில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினர். மேலும் மக்கள் நலன் தான் மிகவும் முக்கியம் என்றும், மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எந்த ஆய்வும் செய்யப்படாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சூதாட்டம் குறித்து சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். 

இந்த நிலையில், இந்த விவாதங்களில் ஐகோர்ட்டு நீதிபதி கூறுகையில், ' தன் மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் லாட்டரி, குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது தெரிந்து கொள்ளுங்கள். மதுரை அருகே எனது ஊரான தென்னூரில் சிகரெட்டு, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னூரை மாதிரி கிராமமாக மதுரை காந்தி அருங்காட்சியகம் தேர்வு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை எதிர்த்த வழக்கில் 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பெறாமல் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்