எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்

மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக தி.மு.க. இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள் என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.

Update: 2022-07-25 18:23 GMT

விழுப்புரம், 

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்முறை, சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

தி.மு.க.வினர் தேர்தல் நேரத்தில் 525 வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. இதற்கான காரணம் கேட்டால் மத்திய அரசு மீது பழிபோடுகின்றனர். இன்றைக்கு விலைவாசி உயர்வால் கூலித்தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வரியை 100-ல் இருந்து 150 சதவீதம் வரை உயர்த்திவிட்டனர். கேட்டால் அதற்கும் மத்திய அரசைத்தான் சொல்கிறார்கள்.

வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தை உயர்த்துவது போல் வியாபார நோக்கத்திற்கான மின்கட்டணத்தையும் உயர்த்தியுள்ளனர். மத்திய அரசு வற்புறுத்துகிறது, அதனால்தான் உயர்த்துகிறோம் என்கிறார்கள். மத்திய அரசை எதிர்த்து பேச தைரியம், தெம்பு இல்லையா? 39 எம்.பி.க்கள் டெல்லியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் மத்திய அரசை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஓ.பன்னீர்செல்வத்தை கைகூலியாக வைத்துக்கொண்டு போலீஸ் துணையோடு சூறையாடி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை சீல் வைத்துள்ளனர், காலம் மாறும், இதற்கு நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஓ.பி.எஸ்.சின் சுயநலம்

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கியது சசிகலா, முதல்-அமைச்சர் பதவியை பறித்த பின்னர் சசிகலா மீது கொலைப்பழி சுமத்தியது ஓ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் அவர் எதையும் செய்ய தயங்க மாட்டார்.

தி.மு.க. அரசு, அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் வரி உயர்வு போட்டு விலைவாசியை உயர்த்துகிறது. மின்கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக இருங்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராஜா, எசாலம் பன்னீர், புண்ணியமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், வளவனூர் நகர செயலாளர் முருகவேல், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், வளவனூர் முன்னாள் நகர செயலாளர் காசிநாதன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டு சேகர், ராதிகா செந்தில், கோதண்டராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்