முல்லை பெரியாறு அணையின் 2-வது சுரங்கப்பாதை ஆய்வுப்பணி நிலை என்ன?-பொதுப்பணித்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணியின் நிலை என்ன? என்பது குறித்து பதில் அளிக்க பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணியின் நிலை என்ன? என்பது குறித்து பதில் அளிக்க பொதுப்பணித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2-வது சுரங்கப்பாதை
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர், முழு கொள்ளளவான 152 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம் எனவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அப்போதில் இருந்து பெரியாறு அணையில் 142 அடிக்கு அதிகமாக சேரும் தண்ணீர், 13 ஷட்டர்கள் வழியாக கேரள கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது. தமிழக பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதலாக இந்த வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.
செயல்படுத்த வேண்டும்
மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், 142 அடிக்கும் அதிகமாக உள்ள தண்ணீரை வீணாக கேரள பகுதியில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் லோயர்கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.
எனவே முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வீணாக கடலில் கலக்கிறது
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் திருநாவுக்கரசு ஆஜராகி, அணையின் 50 அடி உயரத்தில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், அதில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள ஆயக்கட்டுதாரர்கள் தங்கள் பாசனப் பரப்பை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து மழைக்காலங்களில் திறக்கப்படும் உபரி நீர், விவசாயிகளுக்கு பயன்படாமல் வீணாக கடலில் கலக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதன்படி உரிய ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும், என்று வாதாடினார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, 2-வது சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதனால் ஆய்வுகள் தாமதமாக நடந்து வருகிறது, என்றார்.
இதனையடுத்து நீதிபதிகள், 2-வது சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு குறித்த நிலை அறிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.