சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றவரின் கதி என்ன?மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சவுதி அரேபியாவில் பெட்ரோல் பங்க் வேலைக்கு சென்றவரின் கதி என்ன? என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-07-08 18:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகவன்சேரியைச் சேர்ந்த கிரிஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய கணவர் சரத்குமார் (வயது 30). சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காக கடந்த மாதம் ரியாத் சென்றார். முன்னதாக ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர், சவுதி அரேபியாவில் உள்ள தனக்கு வேண்டியவரிடம் கொண்டு சேர்த்துவிடுமாறு கருவாடு பார்சலை எனது கணவரிடம் ெகாடுத்துள்ளார். அதை வாங்கி தனது பையில் என்னுடைய கணவர் வைத்துக்கொண்டார்.

ரியாத் விமான நிலையத்தில் போலீசார் அவரை பரிசோதித்த போது கருவாட்டு பார்சலில் அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட ஏதோ ஒரு பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து எனது கணவர் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் எனத் தெரியவில்லை. எனவே என்னுடைய கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி மத்திய-மாநில அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே எனது கணவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கோரிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உடனடியாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் ஆணையத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவரின் நிலை என்ன? அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.-

Tags:    

மேலும் செய்திகள்