அரிக்கொம்பன் காட்டு யானையின் தற்போது நிலை என்ன? வனத்துறை அறிக்கை

யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Update: 2023-06-20 13:24 GMT

சென்னை,

கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.

இந்நிலையில், அரிக்கொம்பன் காட்டு யானையின் நிலை குறித்து வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 13 நாட்களாக இந்த காடுகளில் உள்ள புற்கள், செடிகொடிகள் மற்றும் ஓடைகளில் வளர்த்துள்ள தாவரங்களை உணவாக உண்டு வருகிறது. 38 முன்களப் பணியாளர்கள் யானையின் நடமாட்டத்தையும் மற்ற தொடர்புகளையும் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது, யானைக் கூட்டங்களுடனான யானை ஆரோக்கியமாக இருப்பதையும், சோலை மற்றும் புல்வெளி பகுதியில் வசிக்க முயற்சிப்பதையும் தானியங்கி புகைப்பட கருளி மூலம் பெறப்படும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

ரேடியோ காலர் சமிக்கைகள் மூலமும் தற்போதைய கண்காணிப்பு அடிப்படையிலும், அரிக்கொம்பன் யானையானது 1340 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள கோதையாறு ஆற்றின் பிறப்பிடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்