தற்போது பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை-மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

தற்போது பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

பொள்ளாச்சி

தற்போது பரவி வருவது சாதாரண காய்ச்சல் தான் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு முகாம்

பொள்ளாச்சி அருகே மண்ணூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடையே மனுக்களை வாங்கினார். பின்னர் அவர் கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். எனவே இணைக்காதவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் முறையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அரசின் திட்டங்களை பெற முடியும் என்றார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் சப்-கலெக்டர் பிரியங்கா, துணை கலெக்டர் சுரேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேலும் முகாமில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதி உள்பட 406 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 95 ஆயிரத்து 70 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தினமும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று கண்காணிக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே தற்போது ஏற்படுவது சாதாரண காய்ச்சல் தான் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்