தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது; நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது- சசிகலா

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது என சசிகலா கூறினார்.

Update: 2022-07-12 09:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார்.

அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா முன்னிலையில் மேடையில் பேசும்போது திவாகரன் கண்ணீர் சிந்தினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:-

சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதிலிருந்து 2500 க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மந்திரி பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார். கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ அது போல் தான் சின்னம்மா.

விழாவில் வி.கே.சசிகலா பேசும் போது கூறியதாவது:-

இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அ.தி.மு.க.வை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. தி.மு.க. எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது.

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது.

அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கை லட்சியம்.

2016 டிசம்பர் மாதம் வரை நடந்தது மட்டும்தான் உண்மையான பொதுக்குழு கூட்டங்கள்; அதன் பின்னர் நடந்தது எல்லாமே நிர்வாகிகள் கூட்டங்களாகவே கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர். நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது. அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான்.அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது என கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்