மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன?

மருந்துகள் விலை உயர்வு, பயணச் சலுகைகள் பறிப்பு: மூத்த குடிமக்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன? இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

Update: 2023-04-02 18:45 GMT

அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான பொருளாக இன்று மருந்துகள் மாறிவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுப்பொருட்களுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டில் மருந்தும் மறக்காமல் இடம்பிடித்து கொள்கிறது. இந்தநிலையில், அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் வருகிற 1-ந் தேதி முதல் 12 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.

இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர்கள் மூத்த குடிமக்கள் தான். காரணம் நிறையப் பேர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருபவர்களாகவும்தான் இருக்கின்றனர். வயதானாலே கூடவே இணை நோய்களும் வந்து விடுகின்றன.

அதுமட்டுமா? கொரோனா பரவிய காலத்தில் முதியவர்களுக்கு குறிப்பாக ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமானவரி விலக்குச் சலுகையும் வருகிற 1-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரத்து, வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைப்பு இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்கு பாதகமாக நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

முதியோர்களுக்கு ஆறுதல்

சென்னை அண்ணாநகரை சேர்ந்த 82 வயதான முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன்:-

வயது ஆக, ஆக நோய்களும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நோய்கள் வந்தால் 10 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டால் போதும், ஆனால் தற்போது வரும் நோய்களுக்கு ஆண்டு கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளதால் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. எனவே முதியவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசு அளிக்கும் ஓய்வூதியத்தை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முதியோர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும், வங்கிகளில் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். முதியோர் நலன் பிரிவை அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரேஷன் கடைகளிலேயே முதியவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் அரசே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முதியவர்களுக்கு நிமோனியா ஊசியை இலவசமாக போட வேண்டும். இதுவே முதியோர்களின் தேவையும், எதிர்பார்ப்புமாக இருப்பதுடன், முதியவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

ரஷியாவை பின்பற்றுமா?

கான்பூர் ஐ.ஐ.டி. விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் (ஓய்வு) மற்றும் ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியருமான இ.ராதாகிருஷ்ணன்:- மூத்த குடிமக்கள் விவகாரத்தில் ரஷியாவை போன்று நம்முடைய அரசு பின்பற்ற வேண்டும். அங்கு மூத்த குடிமக்களின் சேமிப்புக்கு 12 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களிடம் வருமான வரி செலுத்த நிர்பந்திக்க கூடாது. மாறாக வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் வழங்க வேண்டும். அதேபோல், முதியவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே சேர்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு அங்கு பஸ் கட்டணத்தில் சலுகையாக பாதித்தொகை செலுத்தினால் போதும். அதில் முதியோரின் மனைவி அல்லது துணைக்கு ஒருவரையும் அழைத்து செல்லலாம். இதேபோன்று இங்கும் போக்குவரத்து துறையில் முதியவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.

அரசு மீது நம்பிக்கை

பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி:-

லட்சக்கணக்கான குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்த நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வு மேலும் அனைவரையும் பாதிக்கும். முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் கருதி செயல்பட்டு வரும் நம்முடைய மாநில அரசு இந்த விலையை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு சில இடங்களில் பெற்றோர்களை வீடுகளில் கவுரவமாக வைத்து பிள்ளைகள் பார்ப்பதில்லை. இதனால் மருந்து மாத்திரைகளை நம்பியே முதியவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு நலன் புரியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

உரிமையை பறிப்பது போன்றது

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் செல்லதுரை:-

மூத்த குடிமக்கள் தான் நாட்டின் தூண் போன்றவர்கள். அதிலும் அரசு ஊழியராக இருந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை அரசுக்காக அர்ப்பணித்தவர்கள். ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் சார்பில் அரசை கேட்டுக்கொள்வது என்னவென்றால், இன்று உள்ள இளம் தலைமுறையினர் அனுபவிக்கும் அத்துனை துறைகளும் தியாகிகளின் தியாகம் போல, ஓய்வு பெற்றோர் உருவாக்கி வைத்த கட்டமைப்பு.

ராணுவ வீரர்கள் நாட்டை காக்கிறார்கள், நாங்கள் உள்நாட்டில் அரசு பணியில் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர்கள். அனைத்து துறைகளும் சிறப்பாக அமைய பாடுபட்டவர்கள் நாங்கள். எங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெயில்வே சலுகைகளை பறித்து இருப்பது எங்கள் உரிமையை பறிப்பது போன்றது. மேலும் எங்கள் வயது முதிர்வு காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்படுகிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ள சூழ்நிலையில் மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வு எங்களை போன்ற ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும். ஆகவே ரெயில்வே கொடுத்துவந்த சலுகையை எங்களுக்கு திரும்ப அளிக்கவேண்டும். மூத்த குடிமக்களுக்காக சிறப்பு தள்ளுபடியில் மருந்து, மாத்திரை வழங்க வேண்டும்.

ஆஸ்பத்திரி செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வெண்ணந்தூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி லட்சுமி:-

நான் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றேன். எனக்கு உயர் ரத்த அழுத்தநோய் உள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக மாத்திரை உட்கொண்டு வருகின்றேன். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மாத்திரை விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிகிறேன். ஏற்கனவே கூலி வேலை செய்து சாப்பிட்டு வரும் என்னை போன்ற ஏழை தொழிலாளிகளுக்கு பேரிடியாக உள்ளது. எனவே நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரேஷன் கடைகளிலேயே முதியவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஆஸ்பத்திரிக்கு செல்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் தற்போதைய உணவு பழக்க முறையால் ஆஸ்பத்திரி செல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை தான் குறைவாக உள்ளது. வயதான காலத்தில் கண்டிப்பாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். முதியோர் நலன் பிரிவை அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும்.

15 மக்கள் மருந்தகங்கள்

ராசிபுரத்தில் மக்கள் மருந்தகம் நடத்தி வரும் சுகந்த் குமார்:-

ஏழைகள் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 15 மக்கள் மருந்தக கடைகள் உள்ளன. இங்கு மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதால் பலர் இதன் மூலம் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் ஒரு பேடு ரூ.1 என்கிற அளவில் குறைந்து விலைக்கு விற்பனை செய்கிறோம்.

இந்த நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த 1-ந் தேதி முதல் மருந்து பொருட்கள் விலையை மாற்றி அமைத்து உள்ளது. ஆனால் மக்கள் மருந்தகத்தில் பெரிதாக விலை ஏற்றம் இல்லை. ஒருசில மருந்து, மாத்திரைகளின் விலை சிறிய அளவில் உயர்ந்து உள்ளது. அது பெரிதாக மக்களை பாதிக்காது. தொடர்ந்து ஏழைகளுக்கு மருந்து பொருட்களை, குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதற்கு இடைதரகர்கள் இன்றி நேரடியாக மத்திய அரசிடம் இருந்து மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்வதே முக்கிய காரணம் ஆகும்.

இலவசமாக வழங்கலாம்

கந்தம்பாளையத்தை சேர்ந்த முதியவர் நாச்சிமுத்து:-

நான் கூலி தொழில் செய்து தான் வசித்து செய்து வருகிறேன். மேலும் மூட்டு வலிக்காக பல ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். தற்போது மருந்து, மாத்திரைகளின் விலை உயர்ந்து இருப்பதாக கூறுகின்றனர். நான் சம்பாதிக்கும் பணம் விலைவாசி உயர்வு காரணமாக எனக்கு சாப்பிட்டுக்கே போதுமானதாக உள்ளது. தற்போது மாத்திரை விலை அதிகரித்து இருப்பது எனது மாதாந்திர பட்ஜெட்டை உயர்த்தி உள்ளதால் கவலை அளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் முதியோர்களுக்கு உணவைவிட மருந்துகள் தான் அத்தியாவசிய தேவையாக உள்ளது. முடிந்தால் அதற்கான விலையை குறைக்கலாம். இலவசமாகக்கூட வழங்கலாம். அதை விட்டுவிட்டு வரிப்போடுவது, விலைகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் முதியோர்களுக்கு எதிரான செயலாகத்தான் பார்க்கப்படுகிறது.

கட்டண சலுகை

எருமப்பட்டியை சேர்ந்த வயதான தம்பதி பெருமாள்-ரத்தினம்:-

நாங்கள் வயதான காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தினசரி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறோம். உணவுக்கு செலவிடும் பணத்தை விட மருத்துவத்திற்கு, அதாவது மருந்து, மாத்திரைகள் வாங்க அதிகம் செலவிட வேண்டி இருக்கிறது.

தற்போதைய கால கட்டத்தில் அரிசி, பால், மளிகை பொருட்களை போன்று மருந்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. மருந்துகள் இல்லாமல் ஒரு நாளை கூட கடந்து செல்வது இயலாத விஷயமாக மாறிவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது எங்களை போன்ற அன்றாடம் காய்ச்சிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் வாங்கும்போது அதற்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

800 வகையான மருந்துகள்

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை முகவர்கள்:-

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது. இந்த நிலையில், மூலப்பெருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இதனை ஏற்று அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை கடந்த 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவை பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்