ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை?
ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
வெறிச்சோடிய கடைகள்
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. காலையில் 8.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் கடை திறந்திருக்கிறது.
இருந்தாலும் பொதுமக்கள் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையில் 9 மணிக்கு உள்ளாகவும், மாலை 4 மணிக்கு மேலும்தான் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மாலையில் பரபரப்பாக மாறி விடுகின்றன.
தரம் - கூடுதல் பொருட்கள்
ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கி வரும் பொருட்களுடன் கூடுதலாகவும் சில உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
தற்போது வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருக்கிறதா? கூடுதலாக என்ன பொருட்கள் தேவைப்படுகிறது? போன்றவை குறித்து இங்கே பலர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரங்களை காண்போம்.
கோதுமை இல்லை
விருதுநகரை சேர்ந்த குடும்பத்தலைவி ரோகினி:-
ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுக்கான அத்தியாவசிய பொருள்களில் கோதுமை மட்டும் கிடைப்பதில்லை. கேட்டால் கோதுமை தங்களுக்கு குறைவாகத்தான் வழங்கப்படுவதாக கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கும் நிலையில் உள்ளது. எப்போது தான் கோதுமை வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை.
மேலும் வயது முதிர்ந்த மற்றும் நடக்க முடியாத முதியோருக்கும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவாகவில்லை என்று கூறி அத்தியாவசிய பொருட்கள் தர மறுக்கும் நிலையும் உள்ளது. இதற்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய வழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. அங்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படுவதில்லை அதற்கும் பலமுறை அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இதற்கு உரிய மாற்று ஏற்பாட்டை ரேஷன் கடைகளிலேயே செய்ய வேண்டும்.
எடை குறைவு
காரியாபட்டி அருகே உள்ள சித்து மூன்றடைப்பை முருகன்:-
திருச்சுழி தொகுதியில் உள்ள காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். எங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி தரமற்றதாக உள்ளது.
ரேஷன் கடைகளில் போடப்படும் அரிசிகளை பெரும்பான்மையானோர் யாரும் சமைத்து சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளில் உள்ள அரிசிகளை வாங்கி அதை சமைத்து ஆடு, மாடுகளுக்கு வைக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவும் குறைவாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உருட்டு உளுந்து
குருந்தமடத்தை சேர்ந்த மகாலட்சுமி:-
அருப்புக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான எடை அளவில் வழங்கப்படுகிறது. அரிசியை தவிர அனைத்து பொருட்களும் தரமான முறையில் உள்ளது. ஒரு சில கடைகளில் கூடுதல் பொருட்கள் வாங்குமாறு பொதுமக்களை கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தற்போது விலைவாசி அதிகரித்துள்ளதால் சமையலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் மானிய விலையில் வழங்கினால் மிகவும் உதவிகரமாக இருக்கும். உருட்டு உளுந்து தற்போது வழங்கப்படுவதில்லை. இதனை மீண்டும் வழங்கினால் நன்றாக இருக்கம்.
மானிய விலையில் எள்
தேவதானத்தை சேர்ந்த கந்தலீலா:-
ரேஷன் கடைகளில் தரமானதாக இருக்கக்கூடிய பொருட்களை ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து விடுகின்றனர். சுமாரான பொருட்களை பொதுமக்களுக்கு கடை ஊழியர்கள் வினியோகம் செய்கிறார்கள்.
இதில் எடை போடுவதிலும் லாபம் அடைகிறார்கள். ரேஷன் கடைகளில் தற்காலிகமாக மண்எண்ணெய் நிறுத்தப்பட்டுள்ளது. கியாஸ் இணைப்பு இல்லாத கிராமங்களும் இருக்கிறது. அவர்கள் சமையல் செய்ய என்ன செய்வார்கள். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கியாஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு மண்எண்ெணய் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் அங்கு கூடுதலாக பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். வாங்காத பொருட்களுக்கு செல்போனில் வாங்கியதாக தகவல் வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவு பொருட்களை தரமானதாக இருக்கிறதா என மாதம் இருமுறையாவது கடைகளுக்கு சென்று கண்காணிக்க வேண்டும். பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, எள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும்.
அறிவிப்பு பலகை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்மாபட்டி ரேஷன் கடை ஊழியர் பிரியா கூறியதாவது:-
மகளிர் மன்றத்தின் சார்பில் இந்த கடை நடத்தப்படுகிறது. எங்கள் கடையில் தரமானதாகவும், எடை குறைவில்லாமல் ரேஷன் பொருள்களை வழங்கி வருகிறோம். எந்தெந்த தேதியில் என்னென்ன பொருட்கள் போடப்படும் என்ற விவரம் தெருக்களில் உள்ள 12 அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கிேறாம். அந்தந்த தேதிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை பெற்று செல்கின்றனர். பொருட்களை சுகாதாரமான முறையில் பாதுகாத்து வழங்குகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.