அக்னிபாத் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
அக்னிபாத் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
திருப்பூர்
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (வயது 52). இவரது மனைவி செல்வி (42), மகன்கள் முத்து சுபாஷ் (22), அழகுநம்பி (19) ஆகியோருடன் திருப்பூர் நெருப்பெரிச்சலையடுத்த பொம்மநாயக்கன்பாளையம் கிழக்கு நல்லாத்துப்பாளையம் அம்பாள் அவென்யூவில் வசித்து வருகிறார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஹரிச்சந்திரன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மூத்த மகன் முத்து சுபாஷ் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு தேர்வானார். மராட்டிய மாநிலம் நாசிக் பகுதிக்கு சென்று ராணுவ பயிற்சி பெற்று நேற்று திருப்பூருக்கு அவர் திரும்பினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்திற்கு யாரும் செல்லாத நிலையில் முதல் முறையாக ராணுவத்திற்கு தேர்வாகி, பயிற்சியை நிறைவு செய்து ஊர் திரும்பிய முத்து சுபாஷ்க்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கவுன்சிலர் கோபால்சாமி, முன்னாள் கவுன்சிலர் பாலன் ஆகியோர் சால்வை, பூங்கொத்து, மரக்கன்றுகள் கொடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முத்து சுபாஷ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
---------------