196 பேருக்கு ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட உதவி

சேஷமூலை ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 196 பேருக்கு ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

Update: 2023-05-11 19:00 GMT

சேஷமூலை ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 196 பேருக்கு ரூ.45 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சேஷமூலை ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 பேருக்கு ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில் 103 பேருக்கு ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.80 ஆயிரத்து 825 மதிப்பீட்டில் தெளிப்பு பாசன கருவி, கீரை, கொத்தவரை விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

3 சக்கர ஸ்கூட்டர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் 2 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 11 பேருக்கு தாது உப்புக் கலவை, தீவனம், ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்துறை சார்பில் 7 பேருக்கு தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

முகாமில் மொத்தம் 196 பேருக்கு ரூ.45 லட்சத்து 8 ஆயிரத்து 784 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 14 சுய உதவி குழுக்களுக்கு வணிக வள மைய தொழில் முதலீட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்து 30 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

முகாமில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜன், தாசில்தார் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், சேஷமூலை ஊராட்சிமன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்