தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அம்மூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அம்மூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமான தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, புடவை, வேட்டி ஆகியவை அடங்கிய தொகுப்புகளை சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி வழங்கினார்.
அப்போது பேசிய அவர் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் 365 நாட்களும் ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள். எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் அதை மனமுவந்து சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி என்பது கடவுளுக்கு ஒப்பானது என்றார்.
இதில் வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், மாவட்ட துணைச் செயலாளர் குமுதா, அம்மூர் பேரூராட்சி செயலாளர் பெரியசாமி, அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், வேதா சீனிவாஸ், சிவா மற்றும் பலர் பங்கேற்றனர்.