3,577 நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,577 நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி, நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் வழங்கினர்.

Update: 2022-12-31 18:18 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,577 நலவாரிய தொழிலாளர்களுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி, நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கொத்தனார், பெயிண்டர், தச்சர், வெல்டர் உள்ளிட்ட 2,877 தொழிலாளர்களுக்கு ரூ.61 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும்

700 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 34 ஆயிரத்து 900 மதிப்பிலான கல்வி, திருமணம், ஓய்வூதியம் மற்றும் இயற்கை மரணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் என மொத்தமாக 3,577 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது அமைச்சர் காந்தி பேசியதாவது:-

பயனுள்ள திட்டங்கள்

கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நலவாரியத்தில் 36 லட்சம் உறுப்பினர்களாக இருந்த நிலையில், மறுபதிவு செய்யாத காரணத்தினால் 16 லட்சமாக குறைந்தது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1½ ஆண்டுகளில் 7½ லட்சம் நபர்கள் புதிதாக பதிவு செய்து தற்போது 23½ லட்சம் நபர்கள் உள்ளனர்.

ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்கு யார் நல்ல பயனுள்ள திட்டங்களை செய்கிறார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:-

வாழ்க்கையில் முன்னேற...

தொழிலாளர் நலனுக்காக பல திட்டங்களையும், சட்டங்களை வேறெந்த மாநிலத்திலும் கொண்டுவராத நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டில் அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் 18 வகையான நல வாரியங்களை அமைத்து கொடுத்தார்.

அதன்பிறகு தான் மற்ற மாநிலங்களில் தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டது. சமுதாயத்தில் யாரெல்லாம் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்களோ அவர்களை கண்டறிந்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதே நல்லாட்சி. கருணாநிதியை காட்டிலும் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி உலகளவில் தமிழகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.

2011-2021 இடைப்பட்ட 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கொடுக்க வேண்டிய நலத்திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்திலேயே 50 ஆயிரம் நபர்கள் வீதம் இரண்டு கட்டமாக ரூ.420 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி உள்ளது.

அதேபோன்று கல்வி உதவித்தொகையை வழங்குவதையும் இரட்டிப்பாக்கி உள்ளது.

ஓய்வூதியம்

வாரியத்தில் ஒரு தொழிலாளி பதிவு செய்தால் அந்த வருடமே நலத்திட்டங்களை பெறத் தகுதியுடையவராகிறார். ஓய்வூதிய தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர அரசுக்கு முன்மொழிவு அனுப்பி இருக்கிறோம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாரியம் அமைத்து ரூ.89 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் 10 ஆயிரம் நபர்களுக்கு வீடு கட்ட ரூ.400 கோடியினை முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வரை 53 ஆயிரத்து 531 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்