35 ஆயிரம் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்

குக்கிராமங்களில் வசிக்கும் 35 ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-02-17 17:48 GMT

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக நடைபெறுகின்ற சிறப்பு கணக்கெடுப்பு முகாமில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் ஆதார் அட்டை எடுக்கும் பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு உயர்நிலைப்பள்ளி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் மற்றும் ஏரி பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் நலனை காப்பதற்காக இங்கு இருக்கின்ற 5 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 70 குக்கிராமங்களில் வருவாய்த்துறையினர் வீடு, வீடாக சென்று அவர்களுக்கு சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனை பட்டா, வீடு கட்டுவதற்காக வாய்ப்பு இருக்கின்றதா என்பது குறித்த விபரம் மற்றும் அவர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு விவரங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு ஆதார் எடுப்பதற்கான முகாம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான முகாமும் நடைபெற்றது. 70 குக்கிராமங்களிலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று 35 ஆயிரம் பழங்குடியினர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்