மாற்றுத்தினறாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, குறைகளை கேட்டு அறிந்தார்.
நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள், வேலைவாய்ப்பு, குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவி
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு சிறப்பு நாற்காலி, 5 பயனாளிகளுக்கு காதொலி கருவி, 5 பேருக்கு ஊன்றுகோல், ஒருவருக்கு முழங்கை தாங்கி, 2 பேருக்கு பிரெய்லி கைகடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடி என மொத்தம் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் 13 விடுதிகளில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்ற திமிரி அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் இடம் பெற்ற அரக்கோணம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதிக்கு ரூ.5000, மூன்றாவது இடம் பிடித்த ராணிப்பேட்டை சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு ரூ.3000 வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ மூலம் 2 பயனாளிக்கு ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 200 மதிப்பிலான வங்கிக் கடனுதவிக்கான ஆணையும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, மாற்றுத்திறனாளி நல அலுவலர் (பொறுப்பு) பாபு, தாட்கோ மேலாளர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.