ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

Update: 2022-08-13 16:52 GMT

தூத்துக்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 33 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு சைக்கிள், 12 பேருக்கு இஸ்திரிபெட்டி, கிரைண்டர், மூன்று சக்கர சைக்கிள், வெல்டிங் எந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கி பேசினார்.

வெற்றி பெற...

அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு, கவர்னர் மூலம் நம்மை அடிமைப்படுத்தி வருகிறது. பல மசோதாக்கள் நிறைவேற்றி கவர்னரிடம் கொடுத்ததை இன்று வரை கையெடுத்திட்டு டெல்லிக்கு அனுப்பாமல் வைத்து உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆனால் மாற்று கட்சியினர் வாட்ஸ்அப்பில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை போன்று வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற வேண்டும். அதற்கு தற்போது இருந்தே பணியாற்ற வேண்டும்" என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்