பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

Update: 2023-06-05 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதனைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும், பயனாளி ஒருவருக்கு இலவச சலவை பெட்டியினையும், திட கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு பசுமை சாம்பியன் விருதினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் கலெக்டர் வழங்கினார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

பின்னர் உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டம் தனிதுணை கலெக்டர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்